Friday 6 February 2015

எதற்காக எழுதுகிறார் எஸ்.ரா.

எஸ்.ராவின் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு.

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற கதையின் மூலம்  எஸ்.ரா அவர்களின் ஊர் சுற்றலின் ஆழமும் அவர் வாசிப்பின் நீளமும் அவர் கண்ட வாழ்க்கையின் அகலமும் கடற்கரை மணல்போல  நம் கண் முன்னே விரிகிறது.

விக்டோரியா மகாராணி கேட்ட திரிசடை முத்துக்களை தேடி வரும் டக்ளஸ் பிராங் கடலை உணர்ந்தது போல நமக்கும் பல அபூர்வ தரிசனங்கள் புத்தகம் முழுக்க கிடைக்கிறது.

தரமணியில் கரப்பான் பூச்சிகள் சிறுகதை விற்பவன் வாங்குபவன் என எல்லோருடைய உளவியலையும் பேசுகிறது..

புர்ரா என்றொரு சிறுகதை. சின்னக்குழந்தைகள் உங்கள் வீட்டிலிருந்தால் தயவு செய்து இந்தக்கதையை படித்துவிடுங்கள். வாரம் ஒரு முறை கூட படியுங்கள். உங்கள் குழந்தைக்கு கொஞ்சம் வாழ நேரம் கிடைக்கும்.

இந்தக்கதையை புர்ரா என்று கத்திவிட்டு படிக்கத் தொடங்குங்கள். ஏனென்றால் படித்து முடித்ததும் நீங்கள் அதைத்தான் செய்யப்போகிறீர்கள்.

கணவன் மனைவி என இருவரும் வேலைக்குப் போகும் நகரங்களில் வாழ்பவர்களுக்கு குழந்தைகள்,  கொண்டாட்டமாக இருப்பதில்லை.

இரவில் குழந்தையின் அழுகை பொறுக்க முடியாமல் தலையணையால் முகத்தைப் பொத்திக்கொள்கிற தந்தை இதில் இருக்கிறார். அடுத்த சில வருடங்களில் கதைகளில் வருகிற தந்தைகள் குழந்தைகள் அழுதால் ஒருவேளை குழந்தையின் முகத்தை தலையணையால் அழுத்தக்கூடும். இயந்திர வாழ்க்கை கொடுக்கிற அழுத்தங்களில் அவர்கள் அதையும் செய்யக்கூடும்.

அதிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றன இந்தக்கதைகள். கே.கே நகரில் என் வீட்டு அருகில் உள்ள அத்தனை பெற்றோர்களுக்கும் இந்தக்கதையை பிரதியெடுத்து அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பூமியில் சூரிய வெளிச்சம் படாத இடங்களைப்போலவே பேனா வெளிச்சம் படாத இடங்கள் இன்னும் பல வாழ்க்கையில் இருக்கிறது. எஸ்.ரா அதற்காகவே எழுதுகிறார்.

No comments:

Post a Comment